இடதுசாரி அரசியல் (left-wing politics) என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது.இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் என்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டும் என்றும் கருதுகிறது.
அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் "இடது" என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது.
பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை,பொதுவுடமை, அரசின்மை போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் போன்ற மேலும் பல இயக்கங்கள் "இடதுசாரி" என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் தொழிற் கட்சி. என்பனவும் இடதுசாரிகள் என அழைக்கப்பட்டன.