மட்டக்களப்பு மாவட்டத்தின் 40960 ஏக்கர் நிலப்பரப்பு காட்டுவளத்தினைக் தன்னகத்தே கொண்ட மாவட்டத்தின் மழை வளத்தினை தருவதற்கும், வன ஜீவராசிகளின் சரணாலயங்களாகவும், அரிய மருத்துவச் செடி கொடிகளின் இல்லங்களாகவும், அரச மரங்களின் இருப்பிடமாகவும் இருந்து மண் வளத்தினை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரனாக இருந்து இன்று அனைத்து மக்களுக்கும் பயன் தந்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக 18ம் 19ம் நூற்றாண்டுகளில் இருந்து கொலனிகளாக்கப்பட்ட இலங்கை போன்ற குடியேற்ற நாடுகளில் காடுகள் அழிக்கப்பட்டு பயிர்செய்கைகள் ஊக்குவிக்கப்பட்டன, அத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சனத்தொகைப் பெருக்கத்தினால் காடுகள் வீடுகளாகும் குடியேற்றங்களாகின. இதனால் விலங்குகள் வாழிடம் ஒடுக்கப்பட்டன, அதன் மேய்ச்சல் நிலங்கள் கைப்பற்றப்பட்டு பாய்ச்சல் நிலங்களாக்கப்பட்டன.
விளைவு காட்டு மிருகங்கள் வாழிடங்களுக்குள் உணவுக்காக ஊடுருவத்தொடங்கின அதன்போது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையே முரன்பாடுகள் ஏற்ப்பட பல ஆயிரக்கணக்காண வன ஜீவராசிகள் கொன்றழிக்கப்பட்டு எமது இயற்கையின் சமநிலை பாதிக்கப்பட்டன, குறிப்பாக யானைகள் பெரிய பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக நோக்கப்படுகின்றது.
70 விகிதமான யானைகள் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் இருப்பதில்லை என்றும், இதனால் மனிதர்கள் வாழும் இடங்களுக்குள் இவை நுழைவதனால் 2011ம் ஆண்டின் தகவலின்படி 200 யானைகளும் 44 கிராமவாசிகளும் கொல்லப்பட்டிருந்தமை தகவல் சொல்லும் உன்மை.
மட்டக்களப்பு மாவட்டம் அண்மைக்காலங்களாக விவசாயத்தில் புரட்சி காணத்தொடங்கியதால் மறுபறத்தினில் மண்வளத்தினையும், காட்டுவளத்தினையும் படிப்படியாக இழந்து வருவது கண்கூடு. இந்த விவசாயச் செய்கைக்கென எல்லைப்பகுதிகளில் குடியேற்றப்பட்ட குடிமக்கள் பரிதாபகரமாக சாவடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதனை யாராலும் தடுக்கமுடியாத நிலை இருந்து வருகின்றது. போதியளவு மின்சார வேலிகள் இன்மை, பாரம்பரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல், யானைகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்மை, போன்ற இன்னோரன்ன காரணங்களினால் இந்த யானைகளின் அட்டகாசம் மட்டக்களப்பு வறிய விவசாயக்குடும்பங்களை வருடந்தோறும் பதம்பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]() |
| பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடும் போது |
![]() |
| விவசாயிகளுக்கு யானை வெடி வழங்கி வைக்கும் போது |
மட்டக்களப்பில் வெல்லாவளி, பட்டிப்பளை, கிரான், மற்றும் வாகரை போன்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் அமைந்துள்ள எல்லைப்புற விவசாயிகளையே இவை அதிகமாக தாக்கி அழிக்கின்றன. அந்த வகையில்தும்பங்கேணியில் வசித்துவந்த ஏழு பிள்ளைகளின் விவசாயத்தந்தை கடந்த 14.12.2013 அன்று புளுக்குநாவைக்கு விவசாய நடவடிக்கைக்காக சென்றபோது யானை அடித்து இறந்துள்ள பரிதாப நிலை நடந்தேறியுள்ளது.
![]() |
| பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிதி வழங்கி வைத்து உதவும் உதவி ஆணையாளர் |
இதனை உடனடியாக அவதானித்த மட்ட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் திரு ந.சிவலிங்கம் தலைமையில் வனஜீவராசிகளுக்கான உத்தியோகத்தர் ஜெகதீஸ் அவர்களும் சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டதுடன், உதவி ஆணையாளர் சிவலிங்கம் அவர்களினால் இவர்களின் குடும்பத்தாருக்கு இறந்த விவசாயியின் நல்லடக்கத்துக்கென ரூபாய் 25000 கொடுத்தும் உதவியமை உன்மையில் பாராட்டத்தக்க ஒன்றாகும். அத்துடன் யானைகளை விரட்டுவதற்க்கான யானை வெடிகளும் அவரினால் வளங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலைமைகள் நடக்கும் போது பொறுப்புள்ளவர்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்காமல் இந்த சவால்களை எதிர்கொள்ளக்கூடிய தந்திரோபாயங்களை மக்களின் பங்கேற்ப்புடன் தீட்டுவதுடன் அவற்றை நடைமுறையில் கொண்டுவந்து செயற்ப்படுத்தவும் முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வேண்டுகின்றோம்.




